கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை பெரியார் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் ஜெகன்நாதன் அறிவிப்பு

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்று பெரியார் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் ஜெகன்நாதன் அறிவித்துள்ளார்.

Update: 2021-07-01 19:47 GMT
கருப்பூர்
புதிய துணை வேந்தர்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக ஆர்.ஜெகன்நாதனை நியமித்து, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். இதையடுத்து பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-வது துணை வேந்தராக பேராசிரியர் ஆர்.ஜெகன்நாதன் நேற்று இரவு 8.30 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக பல்கலைக்கழகத்துக்கு வந்த அவருக்கு, பதிவாளர் (பொறுப்பு) கே.தங்கவேல், தேர்வாணையர் (பொறுப்பு) எஸ்.கதிரவன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், நிர்வாக அலுவலகத்தில் முறைப்படி துணைவேந்தராக பதவியேற்றுக்கொண்டார் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் சலுகை அளிப்பது தொடர்பான கோப்பில் அவர் முதல் கையெழுத்திட்டார். தொடர்ந்து, பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னுரிமை
தொடர்ந்து துணைவேந்தர் ஜெகன்நாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும். மாணவர்களின் டிஜிட்டல் அறிவுத்திறனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் 60 சதவீதம் டிஜிட்டல் முறையாக மாற வாய்ப்புள்ளது. 
2025-ம் ஆண்டுக்குள் டிஜிட்டல் மென்பொருள் அதிகளவில் உருவாக்கப்படும். அதற்கேற்ற வகையில் மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்படும். இதனை முதன்மை திட்டமாக பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திப்பம்பட்டியை சேர்ந்தவர்
புதிதாக பதவியேற்றுள்ள துணைவேந்தர் ஜெகன்நாதன், சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புல முதன்மையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ள அவர், வேளாண் வானிலை கணிப்பு ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இணையதளத்தில் ஊர் பெயரை தட்டச்சு செய்தால், அந்த ஊரின் வானிலையை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் எளிய முறையை இவர் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
---

மேலும் செய்திகள்