மோகனூரில் ஆம்னி வேன் மோதி விவசாயி பலி 2 வாலிபர்கள் படுகாயம்

மோகனூரில் ஆம்னி வேன் மோதி விவசாயி பலி 2 வாலிபர்கள் படுகாயம்

Update: 2021-07-01 18:45 GMT
மோகனூர்:
மோகனூரில் ஆம்னி வேன் மோதி விவசாயி பலியானார். 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
விவசாயி
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாமரத்துபட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70) விவசாயி. இவர் நேற்று தனது மொபட்டுக்கு டயர் மாற்றுவதற்காக மோகனூரில் வளையப்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு மெக்கானிக் பட்டறையில் மொபட்டை நிறுத்தி சாலையோரம் நின்று பேசி கொண்டிருந்தார். 
அப்போது வளையப்பட்டியில் இருந்து மோகனூர் நோக்கி வேகமாக ஒரு ஆம்னி வேன் வந்தது. அந்தசமயம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் தறிக்கெட்டு ஓடி மெக்கானிக் பட்டறை அருகே நின்ற சின்னுசாமி மீது பயங்கரமாக மோதியது. ஆனாலும் வேகம் குறையாத ஆம்னி வேன் எதிர் ரோட்டுக்கு சென்று அங்குள்ள கடப்பைகல் மீது மோதி கவிழ்ந்தது. 
தீவிர சிகிச்சை
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சின்னுசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். ஆம்னி வேனில் வந்த வளையப்பட்டியை சேர்ந்த டிரைவர் சதீஷ் (27), ஆண்டாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (21) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து வலியால் அலறினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மோகனூர் போலீசார் பலியான சின்னுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சின்னுசாமி மனைவி நாச்சம்மாள் (61) மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்