வெண்ணந்தூர் அருகே கேட்பாரற்று நின்ற காரில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
வெண்ணந்தூர் அருகே கேட்பாரற்று நின்ற காரில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
வெண்ணந்தூர்:
சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணந்தூர் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு ரோட்டில் நேற்று முன்தினம் இரவு கேட்பாரற்று நீண்ட நேரமாக ஒரு கார் நின்றது. காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் நின்ற காரை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரை வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்தநிலையில் காரை உரிமை கோரி யாரும் வராத காரணத்தினால் போலீசார் சந்தேகமடைந்து வெண்ணந்தூர் பகுதியில் இருந்து ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு வரை உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணைைய தொடங்கினர்.
போலீசாரின் தொடர் விசாரணையில் காரில் வந்த மர்ம நபர்கள் கார் விபத்துக்குள்ளானதும் உடனடியாக காரை இயக்க முடியாததால் அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து அவர்கள் மட்டும் தப்பி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
========