அரக்கோணத்தில் ஜமாபந்தியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரக்கோணத்தில் ஜமாபந்தியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
அரக்கோணம்
அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. ஜமாபந்தியை ராணிபேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார். புது கேசாவரம், நகரிகுப்பம் அனந்தாபுரம், தக்கோலம், ஆத்தூர், செய்யூர், அம்மனூர், அணைகட்டாபுதூர், புளியமங்களம், பொய்கைப்பாக்கம் அரக்கோணம் என 11 கிராமங்களுக்கான பதிவேடு, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல், தடையாணை பதிவேடு, பிறப்பு, இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை அவர் சரிபார்த்தார்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்படவில்லை. பொதுமக்கள் ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்களை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தலாம் அல்லது https://gdp.tn.gov.in/jamabandhi/ என்ற இணையதள முகவரியிலோ, இ-சேவை மையங்கள் மூலமாகவோ வருகிற 31-ந் தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய ஜமாபந்தியில் இணையதளம் மூலம் 56 மனுக்களும் மற்றும் பெட்டியில் இருந்து 28 மனுக்களும் பெறப்பட்டது. ஜமாபந்தி நிகழ்ச்சியில் அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், தாசில்தார் பழனிராஜன், துணை தாசில்தார்கள் சரஸ்வதி, செல்வி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.