4 வருடங்களாக சாலை, மின்விளக்கு, பஸ் வசதி இல்லை-கலெக்டரிடம் புகார்
சாலை, மின்விளக்கு, பஸ் வசதி இல்லாமல் கடந்த 4 ஆண்டுகளாக அவதி அடைந்து வருவதாக பெண்கள், கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்
சிவகாசி
சாலை, மின்விளக்கு, பஸ் வசதி இல்லாமல் கடந்த 4 ஆண்டுகளாக அவதி அடைந்து வருவதாக நேதாஜிநகர் பெண்கள், கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
கலெக்டர் ஆய்வு
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு செய்தனர். அப்போது பண்ணைக்கருவிகள் பயன்பாடு மற்றும் இடுபொருட்கள் வழங்குதல், ஆழ்துளை கிணறு வசதி மற்றும் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.
இதேபோல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார வளாகம் அமைக்கும் பணி, சித்தமநாயக்கன்பட்டியில் சுத்திகரிக்கப்பட்ட நிலையம், காளையார்குறிச்சியில் ஊருணி, நீர் செறிவூட்டு நிலையம், சுக்கிரவார்பட்டியில் வரத்து கால்வாய் ஆழப்படுத்தும் பணி, செங்கமலநாச்சியார்புரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் சொட்டுநீர் பாசனத்தில் மாந்தோட்டம் பராமரிப்பு, துணை நீர் மேலாண்மை திட்டத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் அமைக்கும் பணி, ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் உளுந்து, பாசிப்பயறு ஆகிய விதைகளை விவசாயிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
பெண்கள் முறையீடு
ஆனையூர் பகுதியில் கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்து கொண்டிருந்த போது அருகில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் போதிய சாலை, மின் விளக்கு, பஸ் போக்குவரத்து வசதிகளை செய்துதர கோரி முறையிட்டனர். இதை கேட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலரை அழைத்து இந்த பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியம், சிவகாசி சப்-கலெக்டர் பிருத்திவிராஜ், சிவகாசி தாசில்தார் ராஜ்குமார், ஒன்றிய துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன்(வட்டார ஊராட்சி) ராமராஜ் (கிராமஊராட்சி), ஆனையூர் பஞ்சாயத்து தலைவர் லயன் லட்சுமிநாராயணன், வேளாண்மைத்துறை அதிகாரிகள் உத்தண்டராமன், சங்கரநாராயணன், ரவிசங்கர், சீனிவாசன், கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.