தனியார் கிட்டங்கியில் பதுக்கிய 287 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

சிவகங்கை அருகே தனியார் கிட்டங்கியில் பதுக்கிய 287 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 லாரி உள்பட 3 வாகனங்கள் சிக்கின.

Update: 2021-07-01 18:02 GMT
சிவகங்கை,

சிவகங்கை அருகே தனியார் கிட்டங்கியில் பதுக்கிய 287 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 லாரி உள்பட 3 வாகனங்கள் சிக்கின.

சோதனை
சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் உள்ள ஒரு தனியார் கிட்டங்கியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட வினியோக அதிகாரி ரத்தினவேல், சிவகங்கை தாலுகா குடிமைப்பொருள் தனி தாசில்தார் மைலாவதி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ண ராஜா மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது கிட்டங்கி முன்பு 2 லாரி மற்றும் ஒரு வேனில் ரேஷன் அரிசி மூடைகள் ஏற்றப்பட்டு அவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்ததை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினார்கள்.

கிட்டங்கி

 இதைத்தொடர்ந்து போலீசார் விரட்டிச்சென்று அவர்களில் ஒருவரை பிடித்தனர். அத்துடன் அந்த கிட்டங்கியை வாடகைக்கு பிடித்து இருந்த மானாமதுரையை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரையும் பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் செல்லப்பாண்டி சோழபுரத்தில் கிட்டங்கி வாடகைக்கு பிடித்து ரேஷன் அரிசி மூடைகளை கடத்தி வந்து வைத்திருந்ததும் அந்த மூடைகளை மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக சரக்கு வாகனங்களில் ஏற்றி வைத்து இருந்ததும் தெரிய வந்தது.
2 பேர் கைது
இதை தொடர்ந்து போலீசார் 3 வாகனங்களிலும் ஏற்றி வைத்திருந்த 257 மூடை ரேஷன் அரிசியையும் அத்துடன் கிட்டங்கியில் வைக்கப்பட்டு இருந்த 30 மூடை அரிசியையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட 287 மூடை அரிசியையும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
அத்துடன் செல்லப்பாண்டி (வயது 35) மற்றும் கண்ணன் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட கண்ணன் கடத்தல் அரிசி மூடைகளை ஏற்றிச் செல்வதற்காக தயார் நிலையில் இருந்த லாரியின் உரிமையாளர் என்பது குறிப்பிடதக்கது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அரிசி மூடைகளை எங்கிருந்து கடத்தி வந்தனர் என  விசாரித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்