கள்ளக்குறிச்சி,விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-07-01 18:00 GMT
கள்ளக்குறிச்சி, ஜூலை.2-
திருக்கோவிலூர் பகுதியில் நேற்று காலை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. நேரம் செல்ல செல்ல வெயிலில் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். 
இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் வானத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் மழை நீர்  பெருக்கெடுத்து ஓடி சாலையோர பள்ளத்தில் தேங்கியது. திடீரென மழை பெய்ததால், இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. இந்த மழை சுமார் ½  மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. 
இதேபோல் கள்ளக்குறிச்சி பகுதியில்  நேற்று காலை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பின்னர் மாலை 4 மணிக்கு குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து 1 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடு்த்து ஓடி தாழ்வான இடங்களில் குளம் போல் தேங்கி நின்றது. நீண்ட நாள்களுக்கு பிறகு  மழை பெய்ததால், பூமி வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கராபுரத்திலும் நேற்று மாலை மழை பெய்தது. இதேபோல் விழுப்புரத்தில் மாலை 6.20 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழையானது அடுத்த சில நிமிடங்களில் இடி- மின்னலுடன் இடைவிடாமல் 45 நிமிடத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலைகளில் மழைநீர், வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, கண்டாச்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

மேலும் செய்திகள்