தேன்கனிக்கோட்டை பகுதியில் குடை மிளகாய்களை வாங்க வியாபாரிகள் வராததால் குப்பையில் கொட்டும் விவசாயிகள்
தேன்கனிக்கோட்டை பகுதியில் பசுமை குடிலில் சாகுபடி செய்யப்பட்ட குடை மிளகாய்களை வாங்க வியாபாரிகள் வராததால் விவசாயிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
குடை மிளகாய் சாகுபடி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஒன்னுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பசுமைகுடில் தோட்டம் அமைத்து குடைமிளகாய்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பண்ணை தோட்டத்தில் உள்ள குடைமிளகாய் விளைச்சல் அமோகமாக உள்ளது. விவசாயிகள் குடை மிளகாய்களை அறுவடை செய்து மார்க்கெட் மற்றும் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் குடைமிளகாய்களை வாங்க வருவதில்லை. இதன் காரணமாக குடைமிளகாய்கள் செடிகளில் பழுத்து வீணாகி காய்ந்து வருகிறது. இவற்றை அறுவடை செய்து மார்க்கெட் மற்றும் சந்தைகளுக்கு கொண்டு சென்றால் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ குடைமிளகாய்கள் ரூ.4 அல்லது ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் கவலை
இதனால் விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்து வீணாகி வரும் குடைமிளகாய்களை பறித்து குப்பைகளில் கொட்டி வருகின்றனர். மேலும் பசுமைகுடில்கள் மூலம் குடைமிளகாய்கள் சாகுபடி செய்த விவசாயிகள் அதனை தோட்டங்களில் அப்படியே விட்டுள்ளனர்.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.