பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 2,397 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்
பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
காவேரிப்பட்டணம்:
தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, 2,397.42 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும் வகையில் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்கள் மூலம் முதல் போக பாசனத்திற்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 2397.42 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி, பாரூர் பெரிய ஏரியில் தற்போது உள்ள நீர் இருப்பு மற்றும் கால்வாயில் வந்து கொண்டிருக்கும் நீர்வரத்தை கொண்டும் மேலும், பருவ மழையை எதிர்நோக்கியும், பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒத்துழைப்பு
தொடாந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கனஅடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கனஅடி வீதம் என மொத்தம் வினாடிக்கு 70 கனஅடி வீதம் 135 நாட்களுக்கு முதல் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். நாற்றுவிட தண்ணீர் விட்டு பிறகு முறைப்பாசனம் வைத்து 3 நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். பின்னர் 4 நாட்கள் மதகை மூடி வைக்கப்படும். முதல் போக பாசனத்திற்காக 12.11.2021 வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள பாரூர், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த நிலங்கள் பாசன வசதி பெறும். கிழக்கு பிரதான கால்வாயின் மூலம் 1,583.75 ஏக்கர் நிலமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813.67 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 2,397.42 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. எனவே, விவசாயிகள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பயன் அடையுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. சுகவனம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, விவசாய அணி மாநில துணை செயலாளர் டேம் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.