பொள்ளாச்சி அருகே கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
பொள்ளாச்சி அருகே கொரோனா தடுப்பூசி போடுவதற்கு குவிந்த பொதுமக்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையில் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே கொரோனா தடுப்பூசி போடுவதற்கு குவிந்த பொதுமக்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையில் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சிறப்பு முகாம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நகர்புறங்களை தொடர்ந்து கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் மாக்கினாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் முகாம் குறித்த தகவல் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதன் காரணமாக நேற்று அதிகாலை 3 மணி முதல் மாக்கினாம்பட்டி பள்ளி முன் பொதுமக்கள் திரண்டனர். பள்ளியில் இருந்து ஊராட்சி மன்ற அலுவலகம் வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நகராட்சி பகுதியில் தடுப்பூசி போடாததால் நகர பகுதியில் இருந்து பொதுமக்கள் மாக்கினாம்பட்டிக்கு படையெடுத்தனர். இதனால் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
சமூக இடைவெளி இல்லை
இந்த நிலையில் 400 தடுப்பூசிகள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது இருந்தது. இதன் காரணமாக டோக்கன் வழங்குவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதற்கிடையில் டோக்கன் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, வரிசையில் நின்றவர்கள் சிறப்பு முகாம் நடைபெறும் பள்ளி முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாகவும், சிலர் முகக்கவசம் அணியாமல் நின்றதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். இதை தொடர்ந்து காலையில் இருந்து நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கூடுதலாக ஒதுக்கீடு
நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது தொற்று அதிகம் பாதித்த கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடுவது வரவேற்கதக்கது. கடந்த வாரம் ஒரு ஒன்றியத்துக்கு 2 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆனால் நேற்று ஒன்றியத்துக்கு ஒரு ஊராட்சி மட்டும் தான் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் நகராட்சி பகுதியில் தடுப்பூசி போடவில்லை. இதனால் பொள்ளாச்சி நகராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் மாக்கினாம்பட்டிக்கு சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மேலும் 400 தடுப்பூசிக்கு 1000 பேர் வரை திரண்டு வருவதால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கூடுதலாக தடுப்பூசிகளை பொள்ளாச்சி பகுதிக்கு ஒதுக்கீடு செய்வதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.