‘சங்கர்’ யானையை மரக்கூண்டில் இருந்து நாளை மறுநாள் வெளியேற்ற முடிவு

சேரம்பாடி அருகே 3 பேரை கொன்ற ‘சங்கர்’ யானையை மரக்கூண்டில் இருந்து நாளை மறுநாள் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அது கும்கியாக மாற்றப்படுகிறது.

Update: 2021-07-01 17:25 GMT
கூடலூர்,

சேரம்பாடி அருகே 3 பேரை கொன்ற ‘சங்கர்’ யானையை மரக்கூண்டில் இருந்து நாளை மறுநாள் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அது கும்கியாக மாற்றப்படுகிறது.

3 பேரை கொன்ற யானை

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே கடந்த ஆண்டு தந்தை, மகன் உள்பட 3 பேரை காட்டுயானை ஒன்று தாக்கி கொன்றது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் காட்டுயானையை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் அந்த யானைக்கு ‘சங்கர்’ என்று பெயரிட்டு இருந்தனர். 

பின்னர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் அந்த காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து, முதுமலை முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைத்தனர். பின்னர் மரக்கூண்டுக்குள் மூர்க்கத்தனமாக ஆவேசத்துடன் அந்த காட்டுயானை காணப்பட்டது. அதன் உடல் நலனை  பேண மருத்துவக்குழுவினர் மற்றும் பாகன்கள் பணியாற்றி வந்தனர். மூங்கில் உள்ளிட்ட பசுந்தழைகள் உணவாக வழங்கப்பட்டது.

சாதுவாக மாறியது

எனினும் மரக்கூண்டில் இருந்து தப்பிச்செல்வதற்கு காட்டுயானை தொடர்ந்து முயற்சித்தது. ஆனால் ராட்சத மரங்கள் கொண்டு அமைக்கப்பட்டதால் காட்டுயானையால் வெளியே வர முடியவில்லை. நாளடைவில் அந்த காட்டு யானையின் குணம் சாதுவாக மாறியது.

இதைத்தொடர்ந்து தினமும் தனக்கு உணவு அளிக்கும் பாகன்களின் உத்தரவுக்கு பணிந்தது. இதை கண்காணித்து வந்த பாகன்களும் கடந்த சில வாரங்களாக மரக்கூண்டுக்குள் சென்று காட்டுயானையின் மீது ஏறி அமர்ந்து வருகின்றனர். அப்போது பாகன்களின் கட்டளையை ஏற்று காட்டுயானையும் சாந்தமாக நிற்கிறது.

கும்கியாக மாற்ற பயிற்சி

இதனால் மரக்கூண்டில் இருந்து காட்டுயானையை வெளியே கொண்டு வர வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். தொடர்ந்து காட்டுயானைக்கு உரிய பயிற்சிகள் அளித்து, கும்கியாக மாற்ற முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

3 பேரை கொன்ற காட்டுயானை சாதுவான குணத்துக்கு மாறிவிட்டது. இதனால் வருகிற 4-ந் தேதி(நாளை மறுநாள்) காலையில் மரக்கூண்டில் இருந்து காட்டுயானையை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் அதிகாரிகளின் உத்தரவை ஏற்று கும்கியாக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்