விபத்தில் பெண் வக்கீல் பலி
மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் வக்கீல் பலியானார்.
திருமங்கலம், ஜூலை
புதுக்கோட்டை மாவட்டம், மச்சவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனாட்சி (வயது 48). இவர் புதுக்கோட்டையில் வக்கீலாக பணியாற்றி வந்தார். ரவிச்சந்திரன் தனது பட்டாசு கடைக்கு மொத்தமாக பட்டாசு வாங்க திட்டமிட்டார். இதற்காக மனைவி மீனாட்சியுடன் இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் நேற்று காலை திருமங்கலத்தை தாண்டி கள்ளிக்குடி அருகே சென்றபோது, சிவரக்கோட்டை நான்குவழிச் சாலையில் நாய் திடீரென குறுக்கே வந்தது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் மீனாட்சி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ரவிச்சந்திரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.