அட்டாக் பாண்டிக்கு பரோல் கேட்ட மனு தள்ளுபடி
அட்டாக் பாண்டிக்கு பரோல் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.;
மதுரை, ஜூலை
மதுரையை சேர்ந்தவர் பாண்டி என்ற அட்டாக் பாண்டி. இவருக்கு, பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பாளையங்கோட்டை சிறையில் இருந்தார். பின்னர் அவரை மதுரை சிறைக்கு மாற்றும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர் தற்போது மதுரை சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்தநிலையில் அட்டாக் பாண்டியின் தாயார் ராமுத்தாய் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், அவரை கவனித்துக்கொள்ள வசதியாக அட்டாக் பாண்டிக்கு 15 நாள் பரோல் வழங்கும்படி அவருடைய மனைவி தயாளு, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தனது கணவருக்கு பரோல் கேட்டு தயாளு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மத்திய சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரின் கணவர் ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார். மேலும் அவர் மீது மதுரை கோ.புதூர் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்த வழக்கு உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன. அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தற்கு எதிரான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்குகள் நிலுவையில் இருக்கும்பட்சத்தில் தண்டனை கைதியை பரோலில் அனுமதிக்க முடியாது, என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
=======