குழந்தைகள் விற்ற சம்பவத்தில் 7 பேர் அதிரடி கைது
மதுரை காப்பகத்தில் இருந்து 2 குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் 7 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமாக மேலும் பல காப்பகங்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மதுரை,ஜூலை.
மதுரை காப்பகத்தில் இருந்து 2 குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் 7 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமாக மேலும் பல காப்பகங்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
குழந்தைகள் காப்பகம்
மதுரை ரிசர்வ்லைன் போலீசார் குடியிருப்பில் இதயம் அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு 38 ஆண்கள், 35 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் என 84 பேர் தங்கியிருந்தனர்.
இந்த காப்பகத்தில் ஆதரவற்ற நிலையில் தங்கி இருந்த ஐஸ்வர்யா (வயது 22) என்பவரின் ஒரு வயது குழந்தை மாணிக்கம் மற்றும் ஸ்ரீதேவி என்ற பெண்ணின் 2 வயது குழந்தை தனம் என 2 குழந்தைகள் திடீரென மாயமாகின.
இதில் ஆண் குழந்தை மாணிக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அதன் உடலை மதுரை தத்தனேரி மயானத்தில் புதைத்ததாகவும் காப்பக நிர்வாகிகள் போலியான ஆவணங்களை தயார் செய்துள்ளனர்.
திடுக்கிடும் தகவல்கள்
குழந்தையின் தாய் ஐஸ்வர்யாவை நம்ப வைக்க அவரையே மயானத்துக்கு அழைத்துச் சென்று இறுதிச்சடங்குகளை செய்ய வைத்துள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள், ஆவணங்கள் சமூக ஆர்வலரான அசாருதீன் என்பவருக்கு கிடைத்து, அவர் போலீசில் புகார் அளித்த பின்னர்தான் திடுக்கிடும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.
மாயமான 2 குழந்தைகளும் விற்கப்பட்டது தெரியவந்தது. எனவே இது தொடர்பாக மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவின் பேரில் போலீசார், குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நேற்று முன்தினம் இரவில் 2 குழந்தைகளையும் மீட்டனர். பின்னர் காப்பகம் மூடப்பட்டு, அதில் வசித்தவர்கள் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இதை அறிந்ததும் காப்பகத்தின் முக்கிய நிர்வாகியான சிவக்குமார் தலைமறைவாகிவிட்டார். வேறு சிலர் பிடிபட்டனர்.
குழந்தைகள் விற்பனை
சிவகங்கையில் அரிசி கடை நடத்தி வரும் ராஜா என்பவர்தான், இந்த காப்பகத்திற்கு பல்வேறு பொருட்களை வழங்கி உள்ளார். அப்போது காப்பகத்தில் குழந்தைகள் இருப்பதை பார்த்துள்ளார். மேலும் ராஜா, தனது நண்பரின் சகோதரரான இஸ்மாயில்புரத்தை சேர்ந்த கண்ணன் குழந்தை இல்லாமல் தவித்து வருவதை அறிந்தார். எனவே காப்பகத்தில் இருக்கும் ஒரு குழந்தையை அவருக்கு கொடுக்குமாறு சிவக்குமாரிடம் கேட்டுள்ளார்.
சிவகுமாரும் சுமார் ரூ.2 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஒரு வயது ஆண் குழந்தை மாணிக்கத்தை அவரிடம் கொடுத்துள்ளார். இதே போன்று கல்மேடு பகுதியை சேர்ந்த சகுபர்சாதிக்கிற்கு பெண் குழந்தை தனத்ைத விற்பனை செய்துள்ளனர். இதற்கு செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த செல்வி என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.
7 பேர் கைது
அதை தொடர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து சட்டத்திற்கு விரோதமாக குழந்தைகளை விற்றதாக காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி (32), குழந்தைகளை வாங்கிய கண்ணன் (50), பவானி (45), சகுபர்சாதிக் (38), அனிஸ்ராணி (35), இதற்கு உடந்தையாகவும், புரோக்கர்களாகவும் செயல்பட்ட ராஜா (38), செல்வி (42) ஆகிய 7 பேரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் அனைவருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் தலைமறைவாக உள்ள காப்பக நிறுவனர் சிவக்குமார், அவருடைய உதவியாளர் மதர்ஷா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
15-க்கும் மேற்பட்ட காப்பகங்கள்
இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குழந்தைகளை மீட்ட போலீசாரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டினார். மேலும் மதுரையில் உள்ள 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்களை போலீசார் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும், அதன் நடவடிக்கைகளை கண்காணிக்க இருப்பதாகவும், அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் உடனே மூடப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.