குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட சிதம்பரப்பிள்ளை தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் குழாய் சேதமடைந்ததால் அப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை 9.15 மணிக்கு சேலம் மெயின்ரோட்டில் காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அங்கு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்த நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.