பழனி நகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
தனியார் பள்ளிக்கு நிகராக, பழனி நகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பழனி:
பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக மேல்நிலைப்பள்ளிகள், நடுநிலை, தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பழனி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தனியார் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் மற்றும் அங்குள்ள உபகரணங்கள் பொதுமக்களை கவருவதாக உள்ளது. இதனால் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மோகம் பெற்றோர் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவால் நடுத்த வகுப்பினரும் அரசு பள்ளிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பழனி சண்முகபுரம், அடிவாரம் பகுதியில் உள்ள 2 நகராட்சி நடுநிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அதாவது குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன நாற்காலிகள், கணினி வசதி, தொடுதிரை பலகை என பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
இதுபற்றி அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. இதையடுத்து பள்ளிகளை நவீனப்படுத்த நகராட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பழனியில் உள்ள 6 நகராட்சி பள்ளிகளும் நவீனப்படுத்தபட்டு உள்ளன. இதில் சண்முகபுரம் நடுநிலை பள்ளியில் உள்ள 8 வகுப்பறைகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆங்கில வழிக்கல்வி, கணினி வகுப்புகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.
இதனால் நடுத்தர வகுப்பினரும் தங்களது குழந்தைகளை இங்கு சேர்த்து வருகின்றனர். எனவே இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் பள்ளிக்கு கூடுதலான கட்டிடங்கள் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.