கூத்தாநல்லூர் அருகே பரபரப்பு: மண் சரிவால் ஆற்றுக்குள் விழுந்த மரம் உடைப்பு ஏற்படும் அபாயம்
கூத்தாநல்லூர் அருகே மண் சரிவால் ஆற்றுக்குள் மரம் விழுந்தது. அங்கு ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கூத்தாநல்லூர்:-
கூத்தாநல்லூர் அருகே மண் சரிவால் ஆற்றுக்குள் மரம் விழுந்தது. அங்கு ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஆற்றங்கரையில் பள்ளம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் மணல் அள்ளுவது தொடர்ந்து நடக்கிறது. வடபாதிமங்கலம் கிளியனூர் கிராம பகுதியில் வெண்ணாற்றின் கரையை குடைந்து மணல் அள்ளப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றின் கரையில் மிகப்பெரிய அளவில் பள்ளம் காணப்படுகிறது.
கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று இந்த பகுதி வெண்ணாற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றது. இந்த நிலையில் கிளியனூர் ஆற்றின் கரையோரத்தில் மணல் தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் நேற்று மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
மரம் விழுந்ததால் பரபரப்பு
அப்போது கரையோரத்தில் இருந்த தேக்கு மரம் ஒன்று ஆற்றுக்குள் விழுந்தது. அங்கு ஆற்றின் கரையிலும் சிறிதளவு உடைப்பு காணப்படுகிறது. ஆற்றங்கரையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு மரம் விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் கரையில் மேலும் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஆற்றின் கரையோரத்தில் மணல் தோண்டி எடுக்கப்பட்டதே, மண் சரிவு ஏற்பட்டதற்கான காரணம் என்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.