டேங்கர் லாரி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம்

தலைஞாயிறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் டேங்கர் லாரி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.;

Update: 2021-07-01 16:28 GMT
வாய்மேடு:
தலைஞாயிறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் டேங்கர் லாரி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.

குடிநீர் தட்டுப்பாடு

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு  15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினந்தோறும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் தலைஞாயிறு பேரூராட்சிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து வர வேண்டிய தண்ணீரின் அளவு 10 லட்சம் லிட்டர் ஆகும். ஆனால் தற்பொழுது கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தலைஞாயிறு பேரூராட்சிக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீர்  தான் வருகிறது. இதனால் தலைஞாயிறு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம்

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக  குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பழைய ஆற்றங்கரை தெரு,லிங்கத்தடி தெரு, அழகு மாரியம்மன் கோவில் தெரு ,வேளாண்ணி முந்தல் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர்  பிரகாஷ், குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில்  வசிக்கும் பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என  அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்