பேய்க்குளம் வாலிபர் இறந்த வழக்கில் 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
பேய்க்குளத்தை சேர்ந்த வாலிபர் இறந்த வழக்கில் அவரது சகோதரி உள்பட 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தை சேர்ந்தவர் மந்திரம். இவருடைய மகன் மகேந்திரன் (வயது 28). இவரை ஒரு கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு மறுநாள் விடுவிக்கப்பட்ட மகேந்திரன் ஜூன் 11-ம் தேதி திடீரென உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் மகேந்திரன் இறந்ததாக கூறி அவரது தாய் வடிவு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி சாத்தான்குளம் போலீசார், அப்போதைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் சில போலீசார், கொரோனா தன்னார்வல போலீஸ் நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்துக்கு சென்றனர். அங்கு மகேந்திரனின் உறவினர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கு மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணைக்காக மகேந்திரன் போலீஸ் நிலையத்தில் இருந்தபோது உடன் இருந்த யாக்கோபு ராஜ் மற்றும் சகோதரி சந்தனமாரி உள்ளிட்ட 3 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் நேற்று காலை வக்கீல் ஜெயச்சந்திரன் முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் தீவிர விசாரணை நடத்தினார். இந்த விசாரணை காரணமாக இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி இருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.