தூத்துக்குடியில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை
தூத்துக்குடியில் கொரோனா 3-வது அலையை தடுக்க சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வந்தது. இந்த தொற்று பரவல் கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் அனைத்து அதிகாரிகளும் 3-வது அலை வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாநகர பகுதியில் சுகாதார பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணியில் சுமார் 250 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் உள்ளதா? என்று பரிசோதனை செய்கின்றனர். அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோன்று 6 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும், மீண்டும் வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த பணிகளை தொடர்ந்து 3 மாதங்கள் வரை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாநகர ஆணையர் சாருஸ்ரீ அறிவுறுத்தலின் பேரில் வீடு, வீடாக சுகாதார பணியாளர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.