இ-பாஸ் இன்றி வந்த வாகனங்களுக்கு அபராதம்
கேரளாவில் இருந்து கூடலூருக்கு இ-பாஸ் இன்றி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து, பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
கூடலூர்,
கேரளாவில் இருந்து கூடலூருக்கு இ-பாஸ் இன்றி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து, பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
இ-பாஸ் நடைமுறை
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கில் சில தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் உள்ளது. இதில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி கூடலூர்- கேரளா மற்றும் கர்நாடக எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கேரளாவில் இருந்து கூடலூருக்கு இ-பாஸ் பெறாமல் வாகனங்கள் வந்து செல்கிறது.
வாகன சோதனை
இந்த நிலையில் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உத்தரவின் பேரில் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் ராஜ் பரத், திலீப் உள்ளிட்ட பறக்கும் படையினர் கூடலூர் நகரில் நேற்று மாலை 3 மணிக்கு அதிரடியாக வாகன சோதனை நடத்தினர்.
அப்போது மருத்துவ அவசரம் என்று துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டு கேரள பதிவு எண் கொண்ட 2 கார்கள் இயக்கப்படுவதை கண்டனர். பின்னர் காரின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது விதிமுறைகளை மீறி கேரளாவில் இருந்து கூடலூருக்கு குடும்பத்தினருடன் வந்தது தெரியவந்தது. மேலும் இ-பாஸ் பெறாமல் கூடலூர் நகரில் சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.10 ஆயிரம் அபராதம்
இதைத்தொடர்ந்து கார்களின் உரிமையாளர்களான கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டியை சேர்ந்த அம்சத், கோட்டக்கல்லை சேர்ந்த முகமது அலி ஆகிய 2 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து பறக்கும் படை தாசில்தார் சிவக்குமார் கூறியதாவது:-
இவர்கள் விதிமுறைகளை மீறி கேரளாவில் இருந்து கார்களில் குடும்பத்தினருடன் கூடலூருக்கு வந்து உள்ளனர். நாடுகாணி சோதனைச்சாவடி வழியாக வந்து உள்ளதால் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.