தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஊட்டியில் சம்பளம் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-07-01 15:03 GMT
ஊட்டி,

ஊட்டியில் சம்பளம் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பளம் வழங்கவில்லை

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 170 பேருக்கு கடந்த மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சம்பளம் கேட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சம்பளம் வழங்க ஒப்பந்ததாரர் உறுதி அளித்தார் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் அவர்கள் பணிக்கு திரும்பினர். இருப்பினும் சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த 2 மாதங்களாக சம்பளம் இல்லாமல், தங்களது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவர்கள் பாதிக்கப்பட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

இந்த நிலையில் நேற்று மீண்டும் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். 

போராட்டத்தில் கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காமல் ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பேச்சுவார்த்தை

பின்னர் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒப்பந்ததாரர் மே மாத சம்பளத்தை தர ஒப்புக்கொண்டார். மேலும் வருகிற 14-ந் தேதிக்குள் ஜூன் மாத சம்பளத்தை தருவதாகவும், இனி வரும் மாதங்களில் உரிய தேதிக்குள் சம்பளம் தருவதாகவும் உறுதி அளித்தார்.

தொடர்ந்து மே மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் அதற்குள் மதியத்துக்கு மேல் ஆனதால், அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பணிக்கு திரும்புகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்