தஞ்சை மாவட்டத்தில் பாதியாக குறைந்த கொரோனா பரிசோதனை 6,926-ல் இருந்து 3,684 ஆனது

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Update: 2021-07-01 15:02 GMT
தஞ்சாவூர், 

பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து இன்னும் மீளவில்லை. ஆனாலும் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை பாதியாக குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 6,926-ல் இருந்த பரிசோதனை தற்போது 3,684 ஆக குறைந்துள்ளது. இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா 2-வது அலை தாக்கம் அதிகரித்ததன் காரணமாக இன்றும் தஞ்சை மாவட்டம், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்பட்டு வந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலமும் இந்த பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தஞ்சை மாநகரில் மட்டும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, கரந்தை, மானம்புச்சாவடி, கல்லுக்குளம், சீனிவாசபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் பரிசோதனை மையம், சிறப்பு முகாம்கள் மூலமும் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த மே மாதம் 25-ந் தேதிக்கு பிறகு கொரோனா பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த மே மாதம் 27-ந் தேதி 6,926-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் தொற்று அதிகரித்ததன் காரணமாக இந்த பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டத்தில் 3,684 பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த மே மாதம் இறுதியில் கொரோனா பரிசோதனை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் பின்னர் தற்போது பரிசோதனைகளும் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த 24-ந் தேதி 5,033 பேருக்கும், 25-ந் தேதி 4,045 பேருக்கும், 26-ந் தேதி 5,490 பேருக்கும், 27-ந் தேதி 4,854 பேருக்கும், 28-ந்தேதி 4,344 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பரிசோதனைகளும் குறைந்து கொண்டே வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் 8 லட்சத்து 59 ஆயிரத்து 440 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 63 ஆயிரத்து 378 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 60 ஆயிரத்து 681 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் 195 பேர் பலி
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தாக்கத்தால் தொற்று அதிகரித்து வந்த நிலையில் உயிரிழப்புகளும் அதிக அளவில் நிகழ்ந்தன. அதிகபட்சமாக ஒரே நாளில் 21 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தற்போது குறைந்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் தஞ்சை மாவட்டத்தில் குறைந்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த மே மாதம் 30-ந்தேதி வரை கொரோனாவுக்கு 510 பேர் பலியாகி இருந்தனர். நேற்று முன்தினம் வரை தஞ்சை மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 705 ஆக உயர்ந்தது. அதாவது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 195 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்