வேலூர் மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூர் மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூர்
வேலூர் மண்டித்தெரு, லாங்குபஜாரில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். அதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு புகார்கள் சென்றன. அவரது உத்தரவின்பேரில் 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் நேற்று மண்டித்தெரு, லாங்குபஜாரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகளை அகற்றினர். மேலும் அரிசிமூட்டைகள், மளிகை பொருட்களை கடையின் உள்ளே வைக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக நடைபாதையில் கடையின் பெயர்பலகை உள்பட எந்த பொருட்களையும் வைக்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.