சாலையோரம் வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்

சாலையோரம் வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு கருத்து.

Update: 2021-07-01 13:10 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், முருகானந்தம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு, பொதுமக்களிடம் அடையாள அட்டைகள் கேட்கப்படுகிறது. இதனால், வீடு இல்லாமல் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை.

எனவே, வீடு, அடையாள அட்டை இல்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலையோரம் வசிப்போருக்கு தடுப்பூசி போடுவது குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். மேலும், “சாலையோரங்களில் வீடில்லாமல் வசிப்பவர்களுக்கு கொரோனா நோய் தொற்று மிக எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தி நோய் பரவலை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகளிலும் இதனை செய்ய வேண்டும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்