டெல்டா பிளஸ் தொற்று வேகமாக பரவும் என்பதை உறுதி செய்ய கூடுதல் தரவுகள் தேவை - எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா
டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவுமா என்பது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மருத்துவர்கள் ஏராளமானோர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். கடந்த ஓர் ஆண்டாக மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிரானப் போரில் தீவிரமாக ஈடுபட்டார்கள், அவர்களின் அர்ப்பணிப்பான பணி ஊக்குவிக்கப்பட வேண்டும், உயிர்தியாகம் செய்த மருத்துவர்களை நினைவில் கொள்ள வேண்டும்.
டெல்டா பிளஸ் கொரோனா தொற்று வேகமாக பரவும் என்பதை உறுதி செய்ய கூடுதல் தரவுகள் தேவை. நோய் எதிர்ப்பு சக்தியை மீறி டெல்டா பிளஸ் பாதிப்பு அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதற்குப் போதுமான ஆதாரங்களும், புள்ளிவிவரங்களும் இல்லை.
கொரோனா வைரஸ் தடுப்பு முறைகளை மக்கள் தொடர்ந்துதீவிரமாகப் பின்பற்றினால், குறிப்பாக முகக்கவசம் அணிதல், சமூகவிலகல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் அடுத்தடுத்து புதிதாக உருவாகும் உருமாற்ற வைரஸ்களிடம் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை ஒவ்வொருவரும் கடைபிடித்து, தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டு, மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.