சென்னிமலை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை; வாட்ஸ்-அப்பில் தூக்கு கயிறு படத்தை அனுப்பிவிட்டு விபரீதம்
சென்னிமலை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். வாட்ஸ்-அப்பில் தூக்கு கயிறு படத்தை அனுப்பிவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
சென்னிமலை
சென்னிமலை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். வாட்ஸ்-அப்பில் தூக்கு கயிறு படத்தை அனுப்பிவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மரத்தில் வாலிபர் பிணம்
சென்னிமலை வனத்துறையினர் நேற்று காலை சென்னிமலை அருகே பள்ளக்காட்டுப்புதூர் அருகே உள்ள தெற்கு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்தனர்.
உடனே இதுபற்றி சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
வாட்ஸ்-அப்பில் தூக்கு கயிறு
விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் இளைய மகன் அரவிந்தசாமி (வயது 23). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அரவிந்தசாமி தனது செல்போனில் உள்ள வாட்ஸ் அப்பில் வனப்பகுதியில் தூக்கு கயிறுக்கு பின்னால் இருப்பது போல் தனது படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்கொலை
இதை பார்த்து அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து அரவிந்தசாமியின் செல்போனுக்கு நேற்று மதியம் வரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அரவிந்தசாமியை தேடி பார்த்துள்ளனர். இந்தநிலையில்தான் அரவிந்தசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.