பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தரமான புதிய ரக வேட்டி-சேலை; கைத்தறி துறை அமைச்சர் தகவல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தரமான புதிய ரக வேட்டி-சேலை வழங்க திட்டமிட்டு இருப்பதாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

Update: 2021-06-30 21:28 GMT
ஈரோடு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தரமான புதிய ரக வேட்டி-சேலை வழங்க திட்டமிட்டு இருப்பதாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
ஈரோடு பவானி ரோட்டில் இயங்கி வரும் தமிழ்நாடு நூல் பதனிடும் ஆலை, டெக்ஸ்வேலி ஜவுளி வளாகத்தில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறை கிடங்கு ஆகியவற்றை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-
புதிய ரக வேட்டி-சேலை
தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் ஒட்டு மொத்த உடைகளும் இனிமேல் மிகுந்த தரத்துடன் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இதற்காக புதிய தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு முறை நூல் பதனிடும் போதும், துணிகள் உற்பத்தி செய்யப்படும் போதும் துணியின் தரம் கண்டிப்பாக பரிசோதனை செய்யப்பட வேண்டும். நீள அகலம் மட்டுமின்றி, துணி தயாரிக்கப்பட்டு உள்ள நூல்கள் அரசு வழிகாட்டுதலின்படி உள்ளதா? என்பதையும் சோதனை செய்ய வேண்டும். ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டு உள்ள துணிகளையும் தரம் பரிசோதனை செய்வது அவசியம்.
இதுபோல் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் வேட்டி-சேலைகள் மிக தரமாக வழங்கப்பட வேண்டும். புதிய ரக வேட்டி-சேலைகள் உற்பத்திக்காக தர வழிமுறைகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் மட்டுமே இனிமேல் வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்ய வேண்டும். புதிய தரம் மற்றும் வடிவ வேட்டி-சேலைகள் வரும் பொங்கலுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.
அமைச்சரின் பேச்சின் அடிப்படையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு புதிய தரமான வேட்டி-சேலைகள் பொதுமக்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பரிசோதனைக்கு மாதிரி
ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை கிடங்கில் வைக்கப்பட்டு உள்ள சீருடை துணிகள் தரமானவையாக உள்ளதா? என்று பரிசோதனை செய்ய, துணியில் இருந்து மாதிரி எடுத்து பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கவும் அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மாதிரி துணியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையாளர் டாக்டர் பீலா ராஜேஷ், ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி., திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., தமிழ்நாடு துணிநூல் பதனிடும் ஆலை மேலாண்மை இயக்குனர் செல்வராஜ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்