ஈரோட்டில் கைத்தறி துறை அமைச்சர் ஆய்வு; டெக்ஸ்வேலி ஜவுளி சந்தை செயல்பாடுகளை பார்வையிட்டார்
ஈரோட்டில் நேற்று ஆய்வில் ஈடுபட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, டெக்ஸ்வேலி ஜவுளிசந்தை செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.
ஈரோடு
ஈரோட்டில் நேற்று ஆய்வில் ஈடுபட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, டெக்ஸ்வேலி ஜவுளிசந்தை செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.
அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். இதற்காக நேற்று ஈரோடு வந்த அவரை தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி ஆகியோர் வரவேற்றனர்.
ஈரோடு பவானி ரோடு நெறிகல்மேடு (லட்சுமி தியேட்டர்) பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலைக்கு வந்த அமைச்சர் ஆர்.காந்தி அங்கு ஆலையின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆலையில் நூல் பதனிடுதல், துணிகள் உற்பத்தி உள்ளிட்ட வேலைகள் குறித்து அவர் ஒவ்வொரு பகுதியாக சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இங்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரக துணிகளையும் அவர் பார்வையிட்டார். இதுபோல் அங்குள்ள பணியாளர்களிடமும் அவர் சிறிது நேரம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
துணிகள் சோதனை
இதுபோல் ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலி ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்துக்கு சென்ற அமைச்சர், அங்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள துணிகளை பார்வையிட்டார்.
பள்ளிக்கூட சீருடை துணிகள் உள்பட இருப்பில் உள்ள துணிகள் குறித்து அமைச்சர் ஆர்.காந்தி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். மேலும், துணியின் நீள அகலம், தரம், எந்த வகையான நூல் மூலம் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. மாணவ-மாணவிகள் இந்த துணிகளை அணிந்தால் எவ்வளவு காலம் உழைக்கும், பருவகாலத்துக்கு ஏற்ப மாணவ-மாணவிகளின் உடல் நிலைக்கு துணிகள் வசதியாக இருக்குமா? என்று விசாரித்து தெரிந்து கொண்டார். தமிழ்நாடு நூல் பதனிடும் ஆலை மேலாண்மை இயக்குனர் செல்வராஜ், ஈரோடு மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் சரவணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
டெக்ஸ்வேலி கடைகள்
பின்னர், டெக்ஸ்வேலி ஜவுளி வளாகத்தில் இயங்கி வரும் தனியார் கடைகளையும் அமைச்சர் பார்வையிட்டார். கொரோனா காலத்தில் ஜவுளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு பணிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையே டெக்ஸ்வேலி நிறுவனத்தின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டெக்ஸ்வேலி தலைவர் லோட்டஸ் பெரியசாமி, நிர்வாக இயக்குனர் பி.ராஜசேகர், செயல் இயக்குனர் டி.பி.குமார் ஆகியோரிடம் அமைச்சர் ஆர்.காந்தி கேட்டு அறிந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த ஆய்வுப்பணியின்போது தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ்நாடு கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையாளர் டாக்டர் பீலா ராஜேஷ், ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி., திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.