புதுச்சேரி சட்டசபை முன் மீனவர்கள் திடீர் போராட்டம்

சுருக்கு மடி வலையை பயன்படுத்தும் விவகாரத்தில் மீனவர்கள் சட்டசபையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-30 21:18 GMT
புதுச்சேரி, ஜூலை.1-
சுருக்கு மடி வலையை பயன்படுத்தும் விவகாரத்தில்    மீனவர்கள் சட்டசபையை முற்றுகையிட   முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுருக்குமடி வலை
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த வலைக்கு தடை உள்ளது.
ஆனால் புதுவையில் உள்ள மீனவர்களிடையே சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக இருவேறு கருத்துகள் இருந்து வருகின்றன. இதனால் மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழலில் சுருக்கு மடி வலையை    பயன்படுத்தக் கூடாது என்று மீன்வளத் துறையும் அறிவுறுத்தி உள்ளது. இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
ரங்கசாமி பேச்சுவார்த்தை
இந்தநிலையில் மீனவர்கள் சுமார் 500 பேர் நேற்று காலை சட்டசபைக்கு வந்தனர். அங்கு அவர்கள் சுருக்கு மடி வலையை பயன்படுத்த அரசு தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிட முயன்றனர்.
ஏராளமான மீனவர்கள் குவிந்ததால் சட்டசபைக்கு செல்லும் பாதையில் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். அவர் களுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், லட்சுமிகாந்தன் ஆகியோரும் முதல்-அமைச்சர்   ரங்கசாமியை சந்தித்து பேசினார்கள்.
அரசுக்கு கடிதம்
அப்போது மீனவர்கள் தங்களுக்குள் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்டது. மீனவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று ரங்கசாமி உறுதியளித்தார்.
அதைத்தொடர்ந்து அனைத்து மீனவ கிராமத் தினரும் வலைகள் பயன்படுத்துவது தொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதி கொடுத்ததுடன் ஒற்றுமையாக தொழிலில் ஈடுபடுவது என்று முடிவு செய்து அங்கிருந்து   கலைந்து சென்றனர்.
சுருக்குமடி வலையை பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக   மீனவர்கள் சட்டசபையை முற்றுகையிட முயன்றது      பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்