நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கால்நடைகளின் குடிநீர் தேவையை தீர்க்கவும்
நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கால்நடைகளின் குடிநீர் தேவையை தீர்க்கவும் மேட்டூர் அணை வலது கரை வாய்க்காலில் முன்னதாக தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அம்மாபேட்டை
நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கால்நடைகளின் குடிநீர் தேவையை தீர்க்கவும் மேட்டூர் அணை வலது கரை வாய்க்காலில் முன்னதாக தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வலது- இடது கரை வாய்க்கால்
மேட்டூர் அணையில் வலது (மேற்கு) கரை மற்றும் இடது (கிழக்கு) கரை வாய்க்கால்கள் உள்ளது. இதில் வலது கரை வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீரானது ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, பெரும்பள்ளம், சின்னப்பள்ளம், ஊமாரெட்டியூர், குறிச்சி, ஜம்பை மற்றும் பல பகுதிகளின் வழியாக 43 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 18 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்துவதுடன், பவானி ஆற்றின் வழியாக மீண்டும் காவிரியில் கலக்கிறது
இதேபோல் இடதுகரை வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீரானது அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் 64 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 27 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்துவதுடன், பள்ளிபாளையம் என்ற இடத்தில் மீண்டும் காவிரி ஆற்றில் கலக்கிறது.
ஆகஸ்டு 1-ந் தேதி
வலது கரை மற்றும் இடதுகரை வாய்க்கால் மூலம் நேரடியாக 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் மறைமுகமாக 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
பருவமழை பெய்து மேட்டூர் அணை நிரம்பும் போது காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்துக்காக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 12-ந் தேதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதேபோல் மேட்டூர் அணை வலது கரை, மற்றும் இடதுகரை வாய்க்கால்களில் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 15-ந் தேதிக்குள் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணை நிரம்பாத போது மட்டும் வாய்க்காலில் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்படுவதுண்டு.
கோரிக்கை
இதுகுறித்து அம்மாபேட்டையை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது அம்மாபேட்டை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பலர் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் கால்நடைகளுக்கு குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.
எனவே அம்மாபேட்டை பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கால்நடைகளின் குடிநீர் தேவையை தீர்க்கவும் மேட்டூர் அணை வலது கரை வாய்க்காலில் முன்னதாக தண்ணீரை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கோரிக்கை விடுத்தனர்.