பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சொர்க்க ரதத்தில் மோட்டார் சைக்கிளை வைத்து நூதன போராட்டம்
சேலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சொர்க்க ரதத்தில் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டம் நடந்தது.;
சேலம்
போராட்டம்
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் அதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் 5 ரோடு பகுதியில் நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மொபட்டுக்கு பாடை கட்டியும், ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்று 3-வது நாளாக சேலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் காந்திரோடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சொர்க்க ரதத்தில்...
அப்போது, வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையை அரசுக்கு சுட்டிக்காட்டும் வகையில் இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் சொர்க்க ரதத்தில் மோட்டார் சைக்கிளை படுக்க வைத்து அதற்கு மாலை அணிவித்து எடுத்து வந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் சங்கு ஊதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், தமிழகத்திற்கு தேவையான கொரோனா நோய்தொற்று தடுப்பூசியை முழுமையாக வழங்க வேண்டும், ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான ஏழை மக்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுமாதவன், மாநகரக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், தமிழ்ச்செல்வன், ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.