அடுத்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைப்பேன் - எடியூரப்பா பரபரப்பு பேட்டி
அடுத்த கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவை வெற்றி பெற வைப்பேன் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.;
பெங்களூரு:
வளர்ச்சி திட்ட பணிகள்
முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூரு ராஜ்பவனில் கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து பேசினார். அவரது உடல்நலம் குறித்து எடியூரப்பா விசாரித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கவர்னர் வஜூபாய் வாலா கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க அவரை நேரில் சந்தித்தேன். அவர் தற்போது நலமாக உள்ளார். ஓய்வு எடுத்து வருகிறார். அரசியல் குறித்து நான் எதுவும் பேசவில்லை. முழுக்க முழுக்க உடல்நலம் குறித்து விசாரிக்கவே அவரை சந்தித்தேன். மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மிகப்பெரிய சவால்
அடுத்த 2 ஆண்டுகளுக்கு இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்த உள்ளேன். அடுத்த சட்டசபை தேர்தலில் மீண்டும் பா.ஜனதாவை வெற்றி பெற செய்து ஆட்சியில் அமர வைப்பேன். அந்த மிகப்பெரிய சவால் எனக்கு உள்ளது. அதனால் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இப்போது இருந்தே நான் தயாராகி வருகிறேன். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். 10 நாட்களுக்கு ஒரு முறை ஒரு மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள குறைகளை கேட்டு அறிய உள்ளேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
முதல்-மந்திரியை மாற்றுவது குறித்து பா.ஜனதாவில் நீடித்து வரும் குழப்பம் குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். ரமேஷ் ஜார்கிகோளியின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.