பெங்களூருவை உலக தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை - முதல்-மந்திரி எடியூரப்பா

பெங்களூருவை உலக தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

Update: 2021-06-30 20:34 GMT
பெங்களூரு:

மரப்பூங்கா

  பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் புதிய மரப்பூங்கா, கன்னமங்கல ஏரி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த மரப்பூங்கா, ஏரியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் 22 ஏக்கரில் மரப்பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை நான் தொடங்கி வைத்துள்ளேன். பசுமை பெங்களூருவை உருவாக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் இதன் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த மரப்பூங்காவில் பல்வேறு வகையான தாவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பூங்காவால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

நிலத்தடி நீர் மட்டம்

  அதேபோல் கன்னமங்கலா ஏரி 18 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஏரியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. அவற்றை மந்திரி அரவிந்த் லிம்பாவளி முயற்சியால் அகற்றப்பட்டு ஒரு அழகான ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். பெங்களூருவை உலக தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  நகரில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பெங்களூரு நாட்டிலேயே முன்மாதிரி நகரமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம். இங்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

  இந்த விழாவில் வனத்துறை மந்திரி அரவிந்த் லிம்பாவளி, தோட்டக்கலைத்துறை மந்திரி சங்கர், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்