பல லட்சத்துக்கு விற்ற 2 குழந்தைகள் மீட்பு

மதுரையில் கொரோனாவுக்கு இறந்துவிட்டதாக ஆவணங்கள் தயாரித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 2 குழந்தைகள் அதிரடியாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக காப்பக நிர்வாகியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-06-30 20:13 GMT
மதுரை,ஜூலை.
மதுரையில் கொரோனாவுக்கு இறந்துவிட்டதாக ஆவணங்கள் தயாரித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 2 குழந்தைகள் அதிரடியாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக காப்பக நிர்வாகியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குழந்தைகளுடன் தங்கியிருந்த பெண்
மதுரை மாவட்டம் மேலூர் சேக்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசாருதீன், சமூக ஆர்வலரான இவர், அக்கிராமத்தில் ஆதரவின்றி தவித்த ஐஸ்வர்யா (வயது22) என்ற  பெண்ணையும், அவரது 3 குழந்தைகளையும் மதுரை ரிசர்வ் லைன் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து விட்டார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் ஒரு வயது ஆண் குழந்தை மாணிக்கம், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன் தினம் காலை உயிரிழந்து விட்டதாகவும், அரசு அதிகாரிகள் முன்னிலையில் அந்த குழந்தையின் உடல் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் சமூக ஆர்வலர் அசாருதீனுக்கு காப்பகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மயானத்தில் கொடுத்த ஆவணங்கள் மற்றும் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தின் படத்தையும் அசாருதீனுக்கு அனுப்பி வைத்தனர். 
விசாரணை
அந்த ஆவணங்களை பார்த்து சந்தேகம் அடைந்த அசாருதீன், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் நேற்று முன்தினம் இரவு தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி, குழந்தைகள் நல அலுவலர் மற்றும் போலீசார் ஆகியோர் காப்பகத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில், அந்தக் குழந்தை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இறக்கவில்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனைவரும் குழந்தை குறித்து விசாரிக்க அந்த காப்பகத்தை நடத்தி வரும் சிவக்குமாரை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் அதிகமானது. தல்லாகுளம் போலீசார், குழந்தை மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.
குழந்தைகள் நல உறுப்பினர்கள் விசாரணை
அதை தொடர்ந்து மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் சண்முகம், பாண்டியராஜன், சாந்தி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கணேசன், சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்த காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த காப்பகத்தில் 38 ஆண்கள், 35 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் என மொத்தம் 84 பேர் தங்கிருப்பது தெரியவந்தது. மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் என பலரும் அங்கு இருந்தனர்.
பின்னர் குழந்தை குறித்து ஐஸ்வர்யாவிடம் விசாரித்தபோது, தனக்கும், 70 வயது முதியவர் சோனையா என்பவருக்கும் திருமணம் நடந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தனக்கு 3 குழந்தைகள் பிறந்ததாகவும் கூறினார். கடந்த மார்ச் மாதம் சோனையா கொரோனாவில் உயிரிழந்ததையொட்டி தனியாக தவித்து வந்ததாகவும், அதன் பின்னர் அசாருதீன் தன்னை இங்கு சேர்த்து விட்டதாகவும் கூறினார்.
புகைப்படம் எடுத்தனர்
கடந்த 13-ந் தேதி எனது 3-வது குழந்தை மாணிக்கத்திற்கு கொரோனா என்று கொண்டு சென்றனர். அதன் பின்னர் எனது குழந்தை கொரோனாவால் இறந்து விட்டதாக கூறி என்னை தத்தனேரி மயானத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தை புதைக்கப்பட்டதாக ஒரு இடத்தை காண்பித்து இறுதி சடங்குகள் செய்து அதனை புகைப்படம் எடுத்து கொண்டனர். நான் எனது குழந்தையை கடந்த 13-ந் தேதிக்கு பின்னர் பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் குழந்தை புதைக்கப்பட்டதாக தத்தனேரி மயானத்தில் வழங்கப்பட்ட ரசீது எண்ணை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அதே ரசீது எண்ணில் கடந்த மே மாதம் 75 வயது முதியவர் ஒருவர் எரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் அவர்கள், உயிேராடு உள்ள குழந்தையை இறந்துவிட்டதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து, குழந்தையை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
புதைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு
அதைத் தொடர்ந்து தத்தனேரி மயானத்தில் போலீசார், அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அங்கு ஐஸ்வர்யாவின் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்த ஒரு பெண் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மூலம் ஐஸ்வர்யாவின் குழந்தை அங்கு புதைக்கப்படவில்லை என்பதும் உறுதியானது.
இதனிடையே அந்த காப்பகத்தில் தங்கியுள்ள ஸ்ரீதேவி என்ற பெண்ணின் தனம் என்ற 2 வயது பெண் குழந்தையும் கடந்த சில நாட்களாக காணவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து ஸ்ரீதேவியிடம் விசாரித்த போது, தனது குழந்தையை அலங்கரித்து காப்பக நிர்வாகிகள் வெளியே அழைத்து சென்றதாகவும், அதன் பின்னர் தனது குழந்தையை கொண்டு வரவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆவணங்களை கைப்பற்றினர்
இதைத் தொடர்ந்து அங்கு மேலும் எத்தனை குழந்தைகள் மாயமானது என்பது பற்றி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காப்பகத்தில் இருந்த ஆவணங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை போலீசார் கைப்பற்றினர். அது தவிர, அந்த காப்பகத்தில் பணிபுரியும் கலைவாணி என்ற பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் விசாரணையில் அந்த ஆதரவற்றோர் காப்பகம் அரசு அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதனால் அந்த காப்பகம் நேற்று மாலை மூடப்பட்டது. மேலும் அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பல்வேறு இடங்களில் உள்ள காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். அது தவிர அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த சிலர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
குழந்தை மீட்பு
இதற்கிடையே மாயமான 2 குழந்தைகளும் நேற்று இரவில் அதிரடியாக மீட்கப்பட்டனர். இதில் கொரோனாவுக்கு பலியானதாக கூறப்பட்ட குழந்தை மாணிக்கம் மதுரை இஸ்மாயில்புரம் 4-வது தெருவைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் கண்ணன்-பவானி தம்பதியிடம் ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் மாயமான ஸ்ரீதேவி என்ற பெண்ணின் பெண் குழந்தை கருப்பாயூரணி கல்மேடு பகுதியைச் சேர்ந்த அனிஸ்ராணி சக்குபாய்- சாதிக் தம்பதிக்கு விற்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 2 குழந்தைகளையும் போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர். 2 குழந்தைகளும் மீட்கப்பட்ட சம்பவம் திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அனுமதி அளித்தது யார்
தலைமறைவாக உள்ள காப்பக நிர்வாகி சிவக்குமாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்திலேயே அனுமதியின்றி இந்த காப்பகம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த காப்பகம் அங்கு செயல்பட அனுமதி அளித்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்