தடுக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுபோதையில் மனைவியை வாலிபர் அடித்து உதைத்தார். இதை தடுக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திக்கொன்றார். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேரும் கத்திக்குத்து காயம் அடைந்தனர்.

Update: 2021-06-30 19:56 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுபோதையில் மனைவியை வாலிபர் அடித்து உதைத்தார். இதை தடுக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திக்கொன்றார். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேரும் கத்திக்குத்து காயம் அடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மது போதையில் அடி-உதை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் பகுதியை சேர்ந்தவர், காசி ஈசுவரன் (வயது28). இவருக்கும் பெருமாள்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டிதேவி (20) என்பவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 
 இந்தநிலையில் காசி ஈசுவரன் மது குடித்துவிட்டு அடிக்கடி வந்து பாண்டிதேவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 
இதேபோல நேற்று முன்தினம் இரவும் மது போதையில் பாண்டிதேவியை, காசி ஈசுவரன் தாக்கியதாக தெரிகிறது. 
3 பேருக்கு கத்திக்குத்து 
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பாண்டிதேவியின் சித்தி ராஜலட்சுமி மற்றும் மார்த்தாண்டம், கோவிந்தன் ஆகியோர் சேர்ந்து தடுக்க முயன்றனர்.  இந்தநிலையில் காசி ஈசுவரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜலட்சுமி, மார்த்தாண்டம், கோவிந்தன் ஆகிய 3 பேரையும் குத்தினார். 
பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் சாய்ந்த ராஜலட்சுமியை, அவருடைய கணவர் ராஜேசுவரன் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றார். 
சாவு 
அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, ராஜலட்சுமி இறந்து விட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கத்திக்குத்தில் காயம் அடைந்த மார்த்தாண்டம், கோவிந்தன் ஆகிய இருவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜேசுவரன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசி ஈசுவரனை கைது செய்தனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்