கஞ்சா வழக்கில் ஆசிரியர் போலீசில் சரண்

கஞ்சா வழக்கில் ஆசிரியர் போலீசில் சரண் அடைந்தார்.

Update: 2021-06-30 19:55 GMT
பேரையூர்,ஜூலை
டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 45) அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். அப்போது 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், தன் மீது புகார் அளித்த 8-ம் வகுப்பு மாணவியின் தந்தையை பழி தீர்ப்பதற்காக அவரை கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்க வைக்க திட்டம் தீட்டினார். அதன்படி கடந்த மே 18-ந்தேதி டி.கல்லுப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அழகுமணி ஆகியோருடன் சேர்ந்து மாணவி தந்தையின் இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை வைத்தார். பின்னர் போலீஸ் விசாரணையில், மாணவியின் தந்தைக்கும் கஞ்சாவுக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மணிகண்டன், அழகுமணி ஆகியோரை கைது செய்தனர். 
இந்த வழக்கில் ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

மேலும் செய்திகள்