ரேஷன் கடையில் மாயமான சமூக இடைவெளி
சிவகாசியில் ரேஷன் கடையில் சமூக இடைவெளி மாயமானதால் கொரோனா தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.
சிவகாசி,
சிவகாசியில் ரேஷன் கடையில் சமூக இடைவெளி மாயமானதால் கொரோனா தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.
ரேஷன் கடை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் அரசு சார்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் கூடி வருகிறார்கள். இதனால் கொரோனா மீண்டும் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சமூக இடைவெளி
சிவகாசி நேரு காலனியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நேற்று காலை பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் கூடினர்.
இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அரசு அறிவித்து இருந்த வழிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், முக கவசம் அணியாமல் நின்று கொண்டு இருந்தனர். இதனால் தொற்று பரவும் அபாய நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
வலியுறுத்தல்
சிவகாசி தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வட்ட வழங்கல் அலுவலர் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
அவ்வாறு இல்லை என்றால் குறைந்து வரும் கொரோனா தொற்று விரைவில் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரேஷன் கடைகள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.