தனியார் நிறுவன மினிபஸ் மோதி சிறுவன் பலி
நொய்யல் அருகே தனியார் நிறுவன மினிபஸ் மோதி சிறுவன் பலியானான். இதையடுத்து சிறுவனின் உறவினர்கள் டிரைவரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
நொய்யல்
மினிபஸ் மோதல்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள புகளூர் ஹைஸ்கூல்மேடு தட்டங்காடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி பிரியா. இவர்களது மகன் தர்ஷன் (வயது 4). இந்தநிலையில் நேற்று மாலை தர்ஷன் தனது வீட்டின் அருகே சாலையோரத்தில் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள மஞ்சு எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மினி பஸ் வேலைக்காக ஆட்களை ஏற்றிக் கொண்டு புகளூர் கச்சியப்பன் காலனியில் இருந்து ஹைஸ்கூல்மேடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக விளையாடி கொண்டிருந்த தர்ஷன் மீது மினிபஸ் மோதியது. இதில் சிறுவன் பலத்த காயம் அடைந்தான்.
சிறுவன் பலி
இதைக்கண்ட அங்கிருந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் சிறுவனின் உறவினர்கள் வந்து, விபத்தை ஏற்படுத்திய மினிபஸ் டிரைவர் கடவூர் அருகே காக்காவிரியன் பட்டியை சேர்ந்த வைரமுத்துவை (42) அங்கு கிடந்த கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் படுகாயம் அடைந்த தர்ஷனை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்ஷன் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.