குளிப்பட்டி வனப்பகுதி யில் மலைவாழ் மக்களுக்கு கொரோனா பரிசோதனை

குளிப்பட்டி வனப்பகுதி யில் மலைவாழ் மக்களுக்கு கொரோனா பரிசோதனை

Update: 2021-06-30 19:22 GMT
தளி,
குளிப்பட்டி வனப்பகுதி யில் மலைவாழ் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
மலைவாழ் மக்கள்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடந்தூர், சின்னாறு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஈசல்தட்டு, குருமலை, மேல்குருமலை, குளிப்பட்டி, கருமுட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில்  மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
 இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருந்தாலும் தேன்சேகரித்தல், ஆடு, மாடு மேய்த்தல், தைலம் காய்ச்சுதல், வனப்பகுதியில் இயற்கையாக விளைகின்ற பொருட்களை சேகரித்து விற்பனை செய்தல் உள்ளிட்ட சுய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரிசோதனை
இந்த நிலையில் குளிப்பட்டி மலைவாழ் குடியிருப்பில் வசித்து வருகின்ற மலைவாழ் மக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இருந்த நபர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அத்துடன் அங்குள்ள 60 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
இந்த சூழலில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்ததாக தெரிகிறது.அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று சுகாதாரத் துறையினர் மூலமாக குளிப்பட்டி மலைவாழ் குடியிருப்பில் வசித்து வருகின்ற மலைவாழ்மக்களுக்கு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. 
கோரிக்கை
போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதி இல்லாமல் அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற மக்களையும் கொரோனா 2-வது அலை விட்டு வைக்கவில்லை .எனவே வனப்பகுதியில் உள்ள அனைத்து மலைவாழ் குடியிருப்புகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்