இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிரோடு வந்ததால் பரபரப்பு
காரைக்குடி அருகே இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிரோடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லல்
காரைக்குடி அருகே இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிரோடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அடையாளத்தை உறுதி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லலை அடுத்துள்ளது கல்லுப்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு அருகே ஒரு தென்னந்தோப்பில் கடந்த 26-ந் தேதி 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கல்லல் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் கல்லுப்பட்டியை சேர்ந்த சின்னக்கண்ணுவாக இருக்கலாம் என போலீசார் கருதினர்.
சின்னக்கண்ணுவின் குடும்பத்தினர் பட்டுக்கோட்டையில் வசித்து வந்ததால், கல்லுப்பட்டியில் இருந்த அவருடைய சகோதரர் அர்ஜூனை அழைத்து அடையாளத்தை உறுதி செய்யும்படி போலீசார் கூறினர். இதையடுத்து இறந்தவர் உடலை பார்த்த அவர், தன்னுடைய சகோதரர் தான் என்று கூறினார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த உடல் அனுப்பப்பட்டது.
உயிரோடு இருந்தார்
இதற்கிடையில் பட்டுக்கோட்டையில் இருந்து சின்னக்கண்ணுவின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்தனர். குடும்பத்தினரும், இறந்தவரின் உடலை பார்த்து சின்னக்கண்ணு தான் என கூறினர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடல் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வீடு திரும்பிய குடும்பத்தினருக்கு மறுநாள் ஒரு இன்ப அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
அதாவது, சின்னக்கண்ணு உயிரோடு இருப்பதாகவும், அவர் தேவகோட்டை அருகே ஒரு பழைய இரும்பு கடையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. அங்கு சென்று பார்த்தபோது சின்னக்கண்ணு உயிரோடு இருப்பதை கண்டு குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரைக் அழைத்து வந்து கல்லல் போலீசாரிடம் இறந்தது சின்னக்கண்ணு இல்லை என கூறினர். பின்னர் அவரை ஒரு மூன்று சக்கர வாகனத்தில் வைத்து ஊர்வலமாக கிராமத்திற்குள் அழைத்து வந்தனர்.
இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிரோடு வந்ததால் தென்னந்தோப்பில் இறந்து கிடந்தவர் யார் என கல்லல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.