மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவி சாவு
திருவாரூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவி இறந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்
திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் குமார். விவசாயி. இவருடைய மகள் அபிராமி (வயது 21). அதே ஊரில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகள் சினேகா (21). அபிராமி மற்றும் சினேகா ஆகிய இருவரும் திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் இயங்கி வரும் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்தநிலையில் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு தாள்களை அஞ்சல் மற்றும் கூரியர் மூலமாக அனுப்பி வைக்குமாறு கல்லூரி நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு தெரிவித்துள்ளது. இருப்பினும் கல்லூரி அருகே வசிப்பவர்கள் தேர்வு தாள்களை நேரடியாக கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கி வருகின்றனர். இதேபோன்று தேர்வு தாள்களை கல்லூரியில் கொடுப்பதற்காக அபிராமி மற்றும் சினேகா இருவரும் நேற்று கல்லூரிக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் இருவரையும் மோட்டார்சைக்கிள் மூலம் வீட்டிலிருந்து அபிராமியின் தம்பி முத்துக்குமார் (18) என்பவர் கல்லூரிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திருவாரூரை அடுத்த சீனிவாசபுரம் என்ற இடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வளைவு ஒன்றில் எதிரே வந்த லாரியின் சக்கரத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் முத்துக்குமார் மற்றும் அவரது பின்புறத்தில் அமர்ந்திருந்த அக்கா அபிராமி, சினேகா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அபிராமி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருவாரூர் மேட்டு தெருவை சேர்ந்த சக்திவேல் (49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.