மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடைகளின் உரிமம் ரத்து வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி, ஜூலை.1-
தர்மபுரி மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மானியம் உயர்வு
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது காரீப் பருவ சாகுபடி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பருவத்திற்கு தேவையான உரங்கள் போதுமான அளவில் தனியார் உர விற்பனை நிலையங்களிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதன்படி யூரியா 4224 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 489 மெட்ரிக் டன், பொட்டாஸ் 1656 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1256 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 3606 மெட்ரிக் டன் அளவில் இருப்பில் உள்ளது.
தற்போது டி.ஏ.பி. உரத்துக்கான மானியம் உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது. எனவே டி.ஏ.பி. உரம் 50 கிலோ மூட்டை அதிக பட்ச விலை ரூ.1200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யூரியா 45 கிலோ மூட்டை ரூ.266.50 பொட்டாஸ் 50 கிலோ மூட்டை ரூ.1000, ஆர்.சி.எப். பொட்டாஸ் 50 கிலோ மூட்டை ரூ.875 என்ற விலைகளில் மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிமம் ரத்து
உர விலை மற்றும் இருப்பு பலகையை விவசாயிகளின் பார்வையில் படுமாறு கடைகளில் வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. அதில் புகார் தெரிவிக்க வேண்டிய செல்போன் எண்கள் குறிப்பிடப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்றால் உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.சில்லறை விற்பனையாளர்கள் விற்பனை முனைய கருவியில் விவசாயிகள் ஆதார் எண் கொண்டு கிருமிநாசினி பயன்படுத்தி கைரேகை பதிவு செய்து உர விற்பனை மேற்கொள்ள வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்
விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணில் வரும் பாஸ்வேர்டை பயன்படுத்தியும் விற்பனை முனைய கருவியில் ரசீது அளிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. உரங்கள் விலை குறித்த புகார்கள் இருப்பின் விவசாயிகள் வேளாண்மை தகவல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனரை 9443563977 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர்களையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.