மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-06-30 17:23 GMT
பொம்மிடி:

ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் வஞ்சி, சுப்பிரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அதியமான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 
அதே நேரத்தில் ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், இதில் பங்கேற்ற 32 பேர் மீது பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோன்று பொம்மிடி ெரயில் நிலையம் முன்பு  இதே கோரிக்கையை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி நந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நல்லம்பள்ளி
இதே கோரிக்கையை வலியுறுத்தி, நல்லம்பள்ளியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். 
இதில் மாநிலக்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், பிரதாபன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் பொன் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் குப்புசாமி, ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். 
விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.  அதே நேரத்தில் அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 2 பெண்கள் உள்பட 38 பேர் மீது அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இண்டூர்
இண்டூர் பஸ்நிலையம் அருகில் கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும்,  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் அப்புனு தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் சின்னசாமி முன்னிலை வகித்தார். 
கொரோனா நிவாரண நிதி ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும், அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய நிர்வாகி சந்தானமூர்த்தி, மாது, பொன்மாரி, மாணிக்கம், குப்புசாமி, ரங்கநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜா நன்றி கூறினார்.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நல்லம்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சண்முகம், மேகநாதன், பார்த்திபன், ரமேஷ், முனுசாமி காசி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். பெட்ரோல்- டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிய வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்