கூடலூர்-முதுமலை எல்லையில் அகழி வெட்டும் பணி மும்முரம்
காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கூடலூர்-முதுமலை எல்லையில் அகழி வெட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கூடலூர்,
காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க கூடலூர்-முதுமலை எல்லையில் அகழி வெட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
காட்டுயானைகளால் பீதி
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள், கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன.
குறிப்பாக தொரப்பள்ளி, குனில்வயல், அள்ளூர்வயல் உள்பட பல்வேறு இடங்களில் காட்டுயானைகள் அதிகளவில் முகாமிட்டு வருகின்றன. அவை சாலைகளில் உலா வருவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பீதி அடைந்து உள்ளனர். எனவே காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வேண்டும் என்று வனத்துறையினரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அகழிகளை ஆழப்படுத்தும்...
இதைத்தொடர்ந்து வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் கூடலூர்-முதுமலை எல்லையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகழி வெட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இடங்களில் மண் மூடி கிடக்கும் அகழிகளை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இது தவிர இனி வரும் மாதங்களில் தொடர்ந்து பருவமழை பெய்யும் என்பதால் மழைநீரை சேமித்து வைப்பதற்கான சில இடங்களில் குளங்களும் வெட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று வனத்துறையினர் கூறினர்.