இலங்கை தமிழர்களுக்கு ரூ.20 கோடியில் 1,000 வீடுகள்
தமிழகத்தில் முதல்முறையாக, திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கிற இலங்கை தமிழர்களுக்கு ரூ.20 கோடியில் 1,000 வீடுகள் கட்டப்பட உள்ளன என்று அமைச்சர் கே.எஸ். மஸ்தான் தெரிவித்தார்.
திண்டுக்கல்:
321 வீடுகள் கட்ட இடம் தேர்வு
திண்டுக்கல் அருகே தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த 3 முகாம்களையும் ஒன்றிணைத்து, சாணார்பட்டி ஒன்றியம் கூவனூத்து கிராமத்தில் 321 வீடுகள் புதிதாக கட்டப்பட உள்ளன.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
மேலும் தோட்டனூத்து அகதிகள் முகாமுக்கு சென்ற அமைச்சர்கள், அங்கு வசிக்கிற மக்களிடம் குறைகளை கேட்டனர்.
அப்போது, இலங்கை தமிழர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.
ரூ.20 கோடியில் 1,000 வீடுகள்
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 108 இலங்கை அகதிகள் முகாம்களில் 18 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குறைகள் கேட்கப்பட்டு, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்று அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்திலேயே, முதல்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் தான் இலங்கை தமிழர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பில் 1,000 வீடுகள் கட்டப்பட உள்ளன. முதற்கட்டமாக 3 முகாம்களை ஒருங்கிணைத்து நிரந்தர குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வக்பு வாரிய சொத்துக்கள்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பான ஆய்வு செய்யப்பட்டு சொத்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் வக்பு வாரிய சொத்துக்களை தொடர்ந்து கண்டறிந்து உடனுக்குடன் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
இதுவரை சுமார் 7 ஆயிரம் சொத்துக்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என பட்டியலிடப்பட்டுள்ளது. எந்தெந்த சொத்துக்கள் என்பதை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இன்னும் ஒரு மாதத்தில் பல்வேறு சொத்துக்கள் கண்டறிந்து ஆய்வுக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய குடியுரிமை
இதேபோல் அடியனூத்து, கோபால்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் 2 அமைச்சர்களும் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். கோபால்பட்டியில் உள்ள முகாமில் வசிக்கிற இலங்கை தமிழர்களுக்கு, அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகளை அமைச்சர்கள் வழங்கி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் பேசும்போது, இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதனை நிறைவேற்ற பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தபோது வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.
இலங்கை தமிழர்களின் பல்வேறு கோரிக்கைகள், வருகிற 7-ந்தேதி நடைபெறுகிற துறை சார்ந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்றார்.