ஓட்டப்பிடாரம் அருகே 9-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை
ஓட்டப்பிடாரம் அருகே 9-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே 9-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
9-ம் வகுப்பு மாணவி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மருதன்வாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 48). விவசாயி. இவருடைய மனைவி ராஜேசுவரி (44). இவர்களுக்கு 3 மகள்கள் இருந்தனர். இளைய மகள் வசந்தா, பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாததால், வசந்தா பெற்றோருக்கு உதவியாக ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வந்தாள்.
தற்கொலை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடப்புத்தகங்களை வாங்குவதற்கு பள்ளிக்கூடத்துக்கு வருமாறு மாணவி வசந்தாவை ஆசிரியர்கள் அழைத்தனர். ஆனால் வசந்தா பள்ளிக்கூடத்துக்கு செல்ல விருப்பம் இல்லை என்று பெற்றோரிடம் கூறினாள். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் வசந்தாவை கண்டித்தனர்.
இதில் மனமுடைந்த வசந்தா நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினாள்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே மகளை மீட்டு சிகிச்சைக்காக புளியம்பட்டி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே வசந்தா பரிதாபமாக உயிரிழந்தாள்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்த புகாரின்பேரில், நாரைக்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டப்பிடாரம் அருகே 9-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.