சட்டசபை தேர்தல் முடிவுகளை இணையதளத்தில் வெளியிட கோரிய வழக்கு முடித்துவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

சட்டசபை தேர்தல்முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-30 13:43 GMT
சென்னை,

தமிழக சட்டசபைக்கு தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தன. இதில் பதிவான வாக்குகள் மே 2-ந் தேதி எண்ணப்பட்டன.

இந்த தேர்தல்களில் வேட்பாளர்களை அங்கீகரித்து அரசியல் கட்சிகள் வழங்கிய சான்றுகள், தேர்தல் முடிவுகள் இன்னும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என கூறி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தேர்தல் வழக்கு தொடர, அவர்களை தங்கள் கட்சி வேட்பாளராக அங்கீகரித்து அரசியல் கட்சிகள் அளித்த சான்று மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்த ஆவணங்கள் அவசியம் தேவை ஆகும். அதனால், இந்த ஆவணங்களை ஜூலை 15-ந் தேதிக்கு முன் பதிவேற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

பதிவேற்றம்

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜகோபாலன், தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. ஒரு சில ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பித்து பெற வேண்டும் என்று கூறினார்.

அதை பதிவு செய்த நீதிபதிகள், தேவையான ஆவணங்களை மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். அந்த ஆவணங்களை விரைந்து வழங்குவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்