திருவள்ளூர் அருகே தொழிலாளிக்கு கத்தி வெட்டு - 4 பேர் மீது வழக்கு
திருவள்ளூர் அருகே முன்விரோதத்தால் தொழிலாளியை கத்தியால் வெட்டி தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் தேவா நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் துரை. இவரது மகன் சார்லஸ் என்ற முருகையன் (வயது 40). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் சார்லஸ் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஹாரிஸ் உள்பட 4 பேர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி கையால் தாக்கி பின்னர் கத்தியால் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக ஹாரிஸ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.