பூந்தமல்லி அருகே அரசுக்கு சொந்தமான ரூ.210 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பூந்தமல்லி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.210 கோடி மதிப்புள்ள 36 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டி பூந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 36 ஏக்கர் 23 சென்ட் நிலத்தை தனியார் நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வந்தது தெரியவந்தது.
ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இடத்தில் தோப்புகள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அப்போது அந்த இடம் குறித்த உரிய ஆவணங்கள் அதனை வைத்திருந்தவர்களிடம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் லட்சுமணன், வருவாய் ஆய்வாளர் விமலா ரோஸ் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இடத்தை மீட்டனர்.
மேலும் ‘இந்த இடம் அரசுக்கு சொந்தமானது’ என அறிவிப்பு பலகை வைத்தனர். மேலும் அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். தற்போது மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.210 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட 36 ஏக்கர் 23 சென்ட் நிலத்தில் அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.210 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.